Sunday 30 January 2022

பிற தொழில்களையும் கொண்டாடுவோம்

 

வெள்ளைக்காரர்கள் இயந்திரங்களை கண்டுபிடித்துக் கொண்டிருந்த போது நம்மூரில் மாடு செத்தால் என்ன மந்திரம் ஓதலாம் என்று கண்டுபிடித்துக் கொண்டிருந்தார்கள்.” - ஈ.வே.ராமசாமி

நம் பூமிப்பந்தின் வரலாற்றிலேயே மிக முக்கியமான நிகழ்வு ஐரோப்பிய தொழிற்புரட்சி ஆகும். தொழிற்புரட்சி 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கி ஐரோப்பா முழுவதும் பரவி இருந்தது. நமது வாழ்க்கையை எளிமையாக்கும் பொருட்கள் பின்ஊசி முதல் அனைத்தையும் உருவாக காரணமாக அமைந்தது தொழிற்புரட்சி. நம் உணவுப் பழக்கத்தில் இருந்து உடை பழக்கம் வரை அனைத்தையும் மேன்மையடைய செய்தது. தொழில் புரட்சி காலத்தின் கண்டுபிடிப்புகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதனின் வாழ்க்கை முறைக்கும் இப்போதைய நம் வாழ்க்கை முறைக்கும் இடையே எவ்வித எந்த வித்தியாசமும் இருந்திருக்காது. நம் தமிழகத்திலோ இன்றுவரை மனித இனத்தின் மேம்பாட்டுக்கான கண்டுபிடிப்பு முயற்சி நடைபெறவே இல்லை, காரணம் வரணாசிரமம். உதாரணமாக ஐரோப்பாவில் தொழில் புரட்சி ஏற்பட்டபோது மக்கள்தொகையில் மிகச் சிறந்த அறிவுஜீவிகளில் விரும்பியவர்கள் அனைவரும் இரும்பு சம்பந்தபட்ட புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டார்கள். ஆனால் நம் தமிழகத்தில் மக்கள்தொகையில் 0.5% இருக்கும் ஆசாரிகள் மட்டுமே இரும்பு சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வர்ணாசிரம வாழ்க்கைமுறை கொடுத்திருந்தது. அவர்களும் கூட்டு முயற்சியில் ஈடுபட முடியவில்லை . அவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் சில குடும்பங்கள் மட்டுமே இருந்தன. இதனால் பெருங்குழுவாக ஒன்றிணைந்து செயல்பட முடியாத சூழ்நிலை இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் நாம் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது கடினமான காரியமானது.

மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரை விவசாயமும் தொழிற்புரட்சி நிகழாமல் போனதற்கான முக்கியமான காரணமாகத் தோன்றுகிறது. நாட்டில் எத்தனையோ தொழில்கள் இருக்கும்போது இப்போது வரை விவசாயம் மட்டும்தான் மக்களுக்குத் தேவையான தொழில் என்று தமிழினம் கருதுகிறது.  இரும்புத்தொழில், ஜவுளித்தொழில், காலனித்தொழில், மரத்தொழில், வைத்தியத்தொழில், பூசாரிதொழில் போன்றவை எல்லாம் பின் தள்ளப்பட்டுள்ளது. விவசாயத் தொழிலின் பெருமை பற்றி வாட்ஸ்அப்பிலும் பேஸ்புக்கிலும் எண்ணற்ற பெருமைகளைக் காணலாம். இப்போது தமிழகமெங்கும் விவசாய சாதியினர் ஆதிக்க சாதியாக இருப்பதால் இது நிகழ்கிறது எனக் கொள்ளலாம். ஆனால் இதே நிலை கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழக மண்ணில் இருந்துள்ளது எனத் தோன்றுகிறது. நம் மூத்த தமிழ்கவி வள்ளுவன் த்தொழிலை பற்றியும் பாடவில்லை உழவுத்தொழில் பற்றி மட்டுமே பாடல் இயற்றியுள்ளார் –‘உழன்றும் உழவே தலையாம். புலவரே நீங்களும் உழவுத் தொழிலை மட்டும் உயர்த்திப் பிடித்திருக்கிறீர்களே இது நியாயமா. வள்ளுவன் காலம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகளாக  உழவுத் தொழில் தலையாய தொழிலாக இருந்து வருகிறது இருந்தும் அதில் நாம் எவ்வித முன்னேற்றம் அடையாமல் இருந்திருக்கிறோம். வள்ளுவன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் குறளில் சொல்லிய ஏர் தான் சிலகாலம் முன்புவரை தமிழகத்தில் விவசாய நிலத்தை உழ உபயோகப்பட்டது. இரும்புத் தொழிலை தலையாயக் கொண்ட வெள்ளையர்கள் தான் உழவை எளிமைபடுத்த கருவிகளை கண்டுபிடித்தனர். வரும் காலத்தில் தமிழகத்தில் உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பே இல்லை. தேவைப்பட்டால் வெளிநாடுகளிலிருந்து உணவு தானியங்களை இப்போதைய விலையைவிட குறைவான விலையில் இறக்குமதி செய்து கொள்ளலாம். இனிமேலாவது நாம் உழவே தலை என்று கருதாமல் மற்ற தொழில்களுக்கும் சமமான மரியாதை அளிப்பது நன்மை பயக்கும். பிற தொழில்களையும் கொண்டாடுவோம் உழவைப் போலவே.


No comments: