Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, 11 April 2012

அதிர்ஷ்டத்தின் கதை

கள்ளக்காதலியுடன் முயங்கிக் கிடைக்கையில்
அதிர்ஷ்டம் கதவைத் தட்டுகிறது.


கதவைத் திறப்பதா,
பின்வாசல் வழி தப்பித்து ஓடுவதா.

Sunday, 1 January 2012

நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை.

பரபரப்பான நெடுஞ்சாலையின் ஓரத்தில் காத்திருக்கும் அந் நத்தை,
சாலையை கடந்தாக வேண்டும் உடனடியாக.

சாலையின் அகலம் நத்தைக்கு உதவும்படியில்லை,
வாகனங்களின் போக்குவரத்தும் குறையும்பாடில்லை,
எப்போதும் முதுகிலிருக்கும் கூட்டின் பாரம்
வேகத்திற்கான தடையாய் அழுத்துகின்றன.
சாலையில் சிறு கறைகளாக தென்படுகின்றன,
முன்பு பயணித்த நத்தைகளின் கல்லறைகள்.
கூறப்படும் எல்லாக் சொற்களும் அச்சத்தை போதித்து
பயணத்தை தடுக்க முயல்கின்றன.

நத்தை நெடுஞ்சாலையை கடந்தாக வேண்டும் உடனடியாக.
சாலையின் மறுபுறத்திலிருந்து விடாமல் அழைக்கிறது
மறுக்கவே முடியாத ஒரு குரல்.

Monday, 31 October 2011

மகாகவி தேவதேவன் கவிதை

உற்பவம்
-------------

பெரு மழையே, நீ விடாது பெய்து
வெள்ளத்தை உண்டாக்காவிடில்
புயலே, நீ வந்து
என் கூரையை பிய்த்துக் குதறிச் செல்லாவிடில்
வெள்ளமே, நீ வந்து
என் குடிசையை இழுத்துக் கடாசி எறியாவிடில்
யாரே எம்மை இனி காப்பார்
இவ் வறிய வாழ்க்கையிலிருந்து?

~

Tuesday, 28 June 2011

நான் மலையேறுவதற்காக இந்த அடிவாரத்திற்கு வந்துசேரவில்லை.
நீங்கள் மலையேறுவதை வேடிக்கை பார்க்கமட்டுமே.

நான் வெறுமனே இந்த அடிவாரத்தில் நின்றிருப்பேன்,
ஒரு சிறு தூனைப் போல்,
ஒரு வேப்பம் மரத்தைப் போல்.

நான் மலையுச்சியை எற்கனவே கண்டவனா, இல்லை
ஏற முயற்சித்து பல தோல்வி கண்டவனா இல்லை
மலையை முதல் முறை பார்ப்பவனா’ என்பதையெல்லாம்
முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான்.

நான் வெறுமனே இந்த அடிவாரத்தில் நின்றிருப்பேன்,
’நம்மை ஒருவன் உற்றுப் பார்க்கிறான்’ என்ற
எண்ணத்தை உங்களுள் விதைப்பதற்காக.

நீங்கள் மலை ஏறுங்கள்.

Thursday, 27 May 2010

மறைந்து வாழும் ஞானிகள்.

 
 
எங்கோ இருந்து எங்கோ செல்கையில்
வழிதவறிய நான்கு ஞானிகள்
உலகில் அகப்பட்டு கொண்டனர்.

முதல் ஞானி
தத்துவ நூல்களின் பக்கங்களில்
எழுத்துக்களாய் உறங்கிக் கொண்டான்,
யாராலும் எழுப்ப இயலாதபடி.

இரண்டாவது ஞானி
சாலைகளின் ரத்தக் கறைகளை
மழையில் கழுவிக் கொண்டிருக்கிறான்,
அடுத்த விபத்திற்காக.

முன்றாவது ஞானி
உங்கள் பிரார்த்தனைகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறான்,
கடவுளுக்கு புரியாத மொழியில்.

கடைசி ஞானியோ
எனக்குள்ளே அமர்ந்து கொண்டான் -
என்னை அழித்துவிட்டு.