Sunday, 12 July 2020

பாடல் உருவான கதை உருவான கதை

திரைப்படப் பாடல்கள் உருவான போது நடந்த சுவையான சம்பவங்கள் பற்றிய குறிப்புகளை நீங்கள் ஏதாவது வாரயிதழ்களிலோ (குறிப்பாக பாக்யா மற்றும் வாராந்திரி ராணி) அல்லது இனையத்திலோ படித்ததுண்டா. அப்படி படித்திருக்காவிட்டால் நீங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்ததாகவே கருதப்படும். அட, இதற்காக படிக்காதவர்கள் கவலை பட வேண்டாம், நான் உங்களை எதையும் இழக்கவிடமாட்டேன். இதோ கீழுள்ள சுட்டிகளைப்படித்து அந்த ஏதோவொன்றை பெற்றுக் கொள்ளுங்கள்.

http://bit.ly/nR7UlT

http://bit.ly/nySNWi

http://www.nilacharal.com/tamil/specials/kannadasan_185.html

http://www.nilacharal.com/tamil/specials/kannadasan_186.html

பாடல் கதைகள் எவ்வளவு சுவாரஸ்யம் பார்த்தீர்களா, அதனால்தான் நான் ‘பாடல் உருவான கதைகளை’ பலதையும் வெறிகொண்டு தேடித்தேடிப் படித்தது. ஒரு கட்டதில் இனையத்திலோ அல்லது இதழ்களிலோ எங்காவது இந்த ‘பாடல் உருவான கதை’ துணுக்குகள் இருந்து எடுத்துப் படித்தால் அது நான் ஏற்கனவே படித்த துணுக்குகளாகவே இருந்து என்னை ஏமாற்றத்தில் ஆழ்த்தும் நிலைக்கு சென்றுவிட்டது. புதிதாக இன்னும் பல ‘பாடல் உருவான கதை’களை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துக் கொண்ட சென்றது. இந்த சமயத்தில்தான் என் அறை நண்பன் பாலாஜி மூலமாக அவனது உறவினர் கே.நாராயணகோகுல் அறிமுகம் ஆனார். கோகுல் சார் ஏஆர் ரகுமான் அலுவலகத்தில் வேலை பார்ப்பவராம். ’அங்கு கோகுல் சார் என்ன வேலை பார்க்கிறார்?’என நண்பனை கேட்டபோது ஏதோ ஆடிட்டிங் என்று சொன்னான். ஆக இவருக்கு பல ‘பாடல் உருவான கதை’ தெரிந்திருக்கும், இவரிடம் எப்படியாவது சில எக்ஸ்க்ளூசிவான ‘பாடல் உருவான கதைகளை’ தெரிந்து கொள்ளவேண்டும் என முடிவெடுத்தேன்.

ஒரு நாள் பாலாஜி கோகுல்சாரின் வீட்டிற்கு சென்றபோது நானும் அவனுடன் சென்றேன். அங்கு பாலாஜியும் கோகுல் சாரும் தங்கள் குடும்ப விசயங்களை விடாது பேசிக் கொண்டிருந்தார்கள். சரி நாம் கேட்க வேண்டியதை மெதுவாக கேட்டுக் கொள்ளலாம் என காத்திருந்தேன். நேரத்தைப் போக்க சிறிது நேரம் விட்டத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன். அது ரெம்பவும் போரடிக்கவே, அடுத்து அங்கிருந்த டிவியை ஆன் செய்து சன்மியூசிக்கை வைத்தேன். நல்ல ஏஆர் ரகுமான் ஹிட்ஸாக ஒளிபரப்பினார்கள், முதலில் ‘உப்பு கருவாடு, ஊறவெச்ச சோறு..’ பாடல். கோகுல் சாரிடம் பேச்சு கொடுக்க அது நல்ல சந்தர்ப்பம் என தோன்றியது. மெதுவாக அவரிடம் ”சார், இந்த பாட்டு வந்தப்போ ஏஆர்ஆர் கிட்ட இருந்தீங்களா.” என்றேன். அவர் ”அமாந்தம்பி” என்றார்.
”சார், இந்தப் பாட்டு உருவான டைம்ல ஏதாச்சும் இண்ட்ரஸ்டிங்கான சம்பவம் நடந்துச்சா” என்றேன்.
”எதுவும் ஞயாபகமில்ல தம்பி, நா பேப்பரும் அதிகமா படிக்க மாட்டேன், பாலிடிக்ஸ்லயும் எனக்கு ஆர்வமில்ல” - கோகுல் சார்.
”சார் அதில்ல சார், பாட்டு உருவானப்போ ரெக்கார்டிங் தியேட்டர்ல டைரக்டர், ARR, வைரமுத்து நடுவுல ஏதாச்சும் இண்ட்ரஸ்டிங் நடந்துச்சா” - நான்.
”அப்படி எதுவுமில்லப்பா” என முடித்துக் கொண்டார் கோகுல் சார்.

கோகுல் சாரின் பதில்களால் சிறிது ஏமாற்றமடைந்தாலும் அவரை விட்டுவிடக் கூடாது என அடுத்து ’சக்கர இனிக்கற சக்கர..’ பாட்டு ஒளிபரப்பானபோதும் இதே கேள்வியை கேட்டேன். அதற்கு கோகுல் சார் ”தம்பி, பாட்டு ரெக்கார்டிங் அப்போலாம் எந்த பிரச்சனையும் வராது எல்லாம் சுமூத்தா நடக்கும்” என்றார்.
”சார், சும்மா சொல்லாதீங்க, எதாச்சும் நடந்திருக்கும், நீங்க நோட் பண்ணியிருக்க மாட்டீங்க”- நான். கோகுல் சிரித்துக் கொண்டார். எதுவும் பேசவில்லை.

கோகுல் சாரிடம் ’பாடல் உருவான கதை’ எதுவுமே தேறாது என உறுதியாக தோன்றியது. ஆனால் மூனாவதாக ‘சினேகிதனே, சினேகிதனே, ரகசிய சினேகிதனே..’ பாடல் ஒளிபரப்பான போது கோகுல் சார் நான் கேட்காமலே அந்த பாடல் பதிவின் போது நடந்த ஒரு நிகழ்வை சொன்னார். கேட்டதும் நான் மிக ஆச்சரியம் ஆகிப் போனேன். ”தம்பி இந்தப் பாட்டுல ’உந்தன் சட்டை நானும் போட்டு மகிழ்வேன்’னு இருக்குதுல்ல, அங்க முதல்ல ஜட்டினுதான் இருந்துது, டைரக்டர்தான் சட்டைனு மாத்தினாரு” என்றார் கோகுல் சார். எவ்வளவு சுவாரஸ்யமான செய்தி, இவ்வளவு மொக்கையாய் பகிர்ந்துகொள்கிறாரே என நினைத்துக்கொண்டேன். ஆனால் இவர் போன்ற ஆட்கள் பின்லேடனை சுட்டு வீழ்த்திய குழுவில் இடம் பெற்றிருந்தாலும் அதை ‘நா மத்தியானம் ஆந்திரா மீள்ஸ் சாப்பிட்டேன்’ எனபது போல் மொக்கையாய்தான் சொல்லத்தெரியும் எனபதால் நான் அந்த சுவாரஸ்யமான நிகழ்வை அதே சுவாரஸ்யத்துடன் ‘சினேகிதியே.. பிறந்த கதை’ ஆக்கியுள்ளேன். இது உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

சினேகிதியே.. பிறந்த கதை

அலைபாயுதே படத்தில் வரும் ‘சிநேகிதனே சிநேகிதனே..’ எவ்வளவு இனிமையான பாடல், ஆனால் இந்தப் பாடல் உருவானபோது கவிப்பேரரசு வைரமுது மற்றும் மணிரத்ணம் இடையே நடந்த சுவையான சம்பவங்கள் அதைவிட மிக சுவையானவை.

சினேகிதியே பாட்டின் சரணத்தில் வரும் ‘உந்தன் சட்டை நானும் போட்டு மகிழ்வேன்’ எனும் வரி கவிஞர் வைரமுத்துவுடையது இல்லையாம். கவிஞர் அவர்கள் திருமனமான கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் அந்தரங்கமான நெருக்கத்தை உணர்த்துவதற்காக வேரொரு அற்புதமான வரியை எழுதியிருந்தாராம். அது- ‘உந்தன் ஜட்டி நானும் போட்டு அலைவேன்’ எனும் வைரவரி. இந்த வரியை படித்துவிட்டு இயக்குனர் மணிரத்னம், ‘கவிஞரே,
எந்த காரணத்திற்காகவும் சினேகிதர்கள் ஜட்டியை மாற்றி அணிந்து கொள்வது தமிழ் கலாச்சாரத்தில் கிடையாது. மழை காலத்தின் போது வேண்டுமானால், துவைத்துப் போட்ட சட்டை மழைக்கு காய்ந்திருக்காது, அகவே சில நேரம் சட்டையை மாற்றி அணிந்து கொள்வார்கள், எனவே இந்த வரியை ‘உந்தன் சட்டை நானும் போட்டு மகிழ்வேன்’ என சொல்லி அப்படியே செய்தும் விட்டார்.

இதனால் கவிஞர் இயக்குனர் மணிரத்னம் மீது மிக கோபம் கொண்டார். அதே அலைபாயுதே படத்திற்கு அடுத்த பாடல் எழுதும் போது ‘அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டேன்’ என எழுதி தன் கோபத்தை தீர்த்துக் கொண்டார். ‘அலைபாயுதே; படத்தின் பாடல்களும் அக்டோபர் மாதத்தில் தான் உருவானது என்பது அனைவரும் அறிந்ததே.

இயக்குனருக்கும் கவிஞருக்கும் இடையே நடந்த சிறு ஊடல் நமக்கு காலத்தால் அழியாத இரண்டு பாடல்களை தந்திருப்பது பெரும் ஆச்சர்யம்தான் இல்லையா.

இந்தக் கதையை பாலாஜியிடம் காட்டியப்போது அவன், ‘டேய்ய். நீ ஏதாச்சும் சொல்லு சொல்லுனு நச்சரிச்சுக்கிட்டே இருந்ததுனால கோகுல் சார் சும்மா அடிச்சி விட்டாரு, அத நம்பிட்டியா’ என சிரித்தான். அவனுக்கு என்ன தெரியும், நான் கவிப்பேரரசின் ஐந்து கவிதை தொகுப்புகளையும் இரு இதிகாசங்களையும் படித்தவன். எனக்கு கோகுல்சார் சொன்னது உன்மைதான் என நிச்சயமாகத் தெரியும். நீங்கள் இந்த ‘பாடல் உருவான கதையை’ முழுமையாக நம்பலாம். கொஞ்சம் கூட சந்தேகப் படத்தேவையில்லை.

Wednesday, 11 April 2012

அதிர்ஷ்டத்தின் கதை

கள்ளக்காதலியுடன் முயங்கிக் கிடைக்கையில்
அதிர்ஷ்டம் கதவைத் தட்டுகிறது.


கதவைத் திறப்பதா,
பின்வாசல் வழி தப்பித்து ஓடுவதா.

Sunday, 1 January 2012

நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை.

பரபரப்பான நெடுஞ்சாலையின் ஓரத்தில் காத்திருக்கும் அந் நத்தை,
சாலையை கடந்தாக வேண்டும் உடனடியாக.

சாலையின் அகலம் நத்தைக்கு உதவும்படியில்லை,
வாகனங்களின் போக்குவரத்தும் குறையும்பாடில்லை,
எப்போதும் முதுகிலிருக்கும் கூட்டின் பாரம்
வேகத்திற்கான தடையாய் அழுத்துகின்றன.
சாலையில் சிறு கறைகளாக தென்படுகின்றன,
முன்பு பயணித்த நத்தைகளின் கல்லறைகள்.
கூறப்படும் எல்லாக் சொற்களும் அச்சத்தை போதித்து
பயணத்தை தடுக்க முயல்கின்றன.

நத்தை நெடுஞ்சாலையை கடந்தாக வேண்டும் உடனடியாக.
சாலையின் மறுபுறத்திலிருந்து விடாமல் அழைக்கிறது
மறுக்கவே முடியாத ஒரு குரல்.

Monday, 31 October 2011

மகாகவி தேவதேவன் கவிதை

உற்பவம்
-------------

பெரு மழையே, நீ விடாது பெய்து
வெள்ளத்தை உண்டாக்காவிடில்
புயலே, நீ வந்து
என் கூரையை பிய்த்துக் குதறிச் செல்லாவிடில்
வெள்ளமே, நீ வந்து
என் குடிசையை இழுத்துக் கடாசி எறியாவிடில்
யாரே எம்மை இனி காப்பார்
இவ் வறிய வாழ்க்கையிலிருந்து?

~

Tuesday, 28 June 2011

நான் மலையேறுவதற்காக இந்த அடிவாரத்திற்கு வந்துசேரவில்லை.
நீங்கள் மலையேறுவதை வேடிக்கை பார்க்கமட்டுமே.

நான் வெறுமனே இந்த அடிவாரத்தில் நின்றிருப்பேன்,
ஒரு சிறு தூனைப் போல்,
ஒரு வேப்பம் மரத்தைப் போல்.

நான் மலையுச்சியை எற்கனவே கண்டவனா, இல்லை
ஏற முயற்சித்து பல தோல்வி கண்டவனா இல்லை
மலையை முதல் முறை பார்ப்பவனா’ என்பதையெல்லாம்
முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான்.

நான் வெறுமனே இந்த அடிவாரத்தில் நின்றிருப்பேன்,
’நம்மை ஒருவன் உற்றுப் பார்க்கிறான்’ என்ற
எண்ணத்தை உங்களுள் விதைப்பதற்காக.

நீங்கள் மலை ஏறுங்கள்.

Saturday, 22 January 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்வாசகர் கடிதம்

அன்பு கார்த்தி ,
தமிழ்க் கவிதையின் வளம் அளப்பரியது . அனால் சமகாலக் கவிதைகளில் சில தேக்கம் இருக்கிறது .
இருப்பினும் தங்கள் கவிதைகள் அவற்றில் இருந்து மாறுபட்டது . எனவே தான் தங்களைத் தொடர்ந்து எழுதச் சொல்கிறேன் . ஒரு நல்ல கவிதை ஆளுமையை தமிழ்ச் சமூகம் இழக்கக் கூடாது என விரும்புகிறேன் . நல்ல கவிஞனை எப்போதும் தமிழ்ச் சமுகத்தில் பாராட்டமாட்டார்கள். பாரதிக்கும் அதுதான் நேர்ந்தது. அனால் அவன் தளரவில்லை. நீங்களும் அப்படி எழுத பணிவுடன் வேண்டுகிறேன் . ஏனெனில் உங்கள் கவிதை வளத்தைப் பெரிதும் நேசிக்கிறேன் . ஆதலால் சொல்கிறேன்.

...மரணதினும் கொடிது
மரண வாழ்க்கை .
பறவையின் கோதலில்
கழன்று அந்தரத்தில் தவழும்
ஒரு இறகைப் போல
காலத்தில் கரைய எத்துனை நாள்
மலர்ந்துகொண்டிருப்பது .
கனிகளின் காலம் எப்போதும் அந்திதான்.
பித்தம் பூக்கும்
உதய நாழிகை
உப்புக்கடல்தான்

அன்புடன்
சவகர்


சில எண்ணங்கள் :

- இந்த பதிவில் எழுத்துப் பிழை இருந்தால் அதைப் பற்றி என்னிடம் தெரிவிக்க வேண்டாம்.

- அன்பரின் இந்த கடிதத்தை படித்தவுடன் எப்படியாவது தினமும் நிறையா எழுதவேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். இந்த கடிதம் வந்து ஆறு மாதம் ஆகிறது, ஒன்றும் எழுதவில்லை, அதனால் என்ன.. முடிவை மெதுவாய் செயல்படுத்தலாம்.. அனால் முடிவெடுத்தது எடுத்ததுதான்.

- கடிதம் எழுதிய ஜவகர் அண்ணனுக்கு போன் செய்து ‘ஏன்ணா?’ என கேட்டதற்கு அட்டகாசமாய் சிரித்தார்.

- வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்கவும்.

- ’சில எண்ணங்கள்’ என்பது கவிதையின் தலைப்போ, அதற்கு கீழ் இருக்கும் இவை கவிதையோ கிடையாது.

Saturday, 14 August 2010